அண்ணே இஞ்சி டீ சாப்பிடுறீங்களா ?

2014-10-22-JewelryDesigners.png
அண்ணே இஞ்சி டீ சாப்பிடுறீங்களா ?
உறவினரின் நகைக்கடையில் உட்கார்ந்திருந்த போது தம்கேனோடு வந்து இஞ்சி டீ வியாபாராத்தில் இருந்தவரை எங்கோ பார்த்த ஞாபகம். குடிச்சி பாருங்கண்ணே… சீனி கம்மியா இஞ்சி தூக்கலா போட்டு செஞ்சது. எதமா இருக்கும்னு சொன்னவரிடம் இஞ்சி டீ வாங்கிகுடித்துவிட்டு உறவினரிடம் இவர் யாருன்னு கேட்டேன். நம்ம பக்கத்து நகைப்பட்டறைல வேலை பார்த்தானே ஞாபகம் இல்லையான்னு கேட்டார். இப்போது ஞாபகம் வந்தது.
 
இருபது வருடத்திற்கு மேலாக நகைத்தொழில் செய்தவர் டீ வியாபாரம் பார்க்கிறார். பார்க்கவே சங்கடமாக இருந்தது. டீ வியாபாரம் மட்டுமல்ல, ஹோட்டல்களில் சர்வர்களாக, டிரைவர்களாக, வீட்டில் பலகாரம் செய்து விற்பவர்களாக, வியாபார நிறுவனங்களில் செக்யூரிட்டிகளாக இப்படி கிடைத்த வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் பாரம்பரியமான நகைத்தொழில் செய்தவர்கள்.
 
கிராக்கிகள் எனப்படும் நேரடி வாடிக்கையாளர்களைக் கொண்டு அவர்களுக்கு நகைகள் செய்து கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் சேதாரம் மற்றும் செய்கூலி வாங்கி தொழில் செய்பவர்கள் ஒரு பிரிவினர். நகைக்கடை வியாபாரிகளுக்கு வரும் ஆர்டர்களை செய்து கொடுத்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வந்தவர்கள் இன்னொரு பிரிவினர்.
 
தென்றலாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்கையில் சூறாவளியாக வந்தது கார்ப்பரேட் நகைக்கடைகள். அப்போதே இந்த நகைதொழிலாளர்கள் கொஞ்சம் பதற ஆரம்பித்தனர். அவர்கள் பதறியது போலவே காஸ்மோபாலிடன் சிட்டியில் மட்டும் கால் ஊன்றிய இந்த கார்ப்பரேட் நகைக்கடைகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் தட்டு நகரங்களிலும் தங்கள் கிளைகளைப் பரப்பியது. மொத்தமாக நகைத்தொழிலாளர்கள் மற்றும் சிறிய நகைக்கடை வியாபாரிகள் தலையில் மண்ணை அள்ளிப்போட்டார்கள் இந்த கார்ப்பரேட் முதலாளிகள். வித்தை வார்த்தைகளில் விளம்பரம், நடிகர், நடிகைகள் வைத்து கடை திறப்பு இப்படி மக்களை அப்படியே வாரிச்சுருட்டி தங்கள் வசப்படுத்திக்கொண்டார்கள் கார்ப்பரேட் நகை வியாபாரிகள்.
 
திருமணத்திற்கு தாலி செய்வது என்பது ஒரு செண்டிமெண்ட் சாமாச்சாரமாக இருந்தது. எங்க குடும்பத்துக்கு இந்த ஆசாரி தான் எப்பவும் தாலி செஞ்சு தருவார்னு எல்லா குடும்பங்கள்ளயும் ஒரு நகைதொழிலாளர சொல்லுவாங்க. அவரை வைத்து தாலிக்கு தங்கம் உருக்குதல்னு மாப்பிள்ளை வீட்ல ஒரு வைபவம் நடக்கும். மாப்பிள்ளை உடன் பிறந்த திருமணமான சகோதரிகள் சம்பிரதாயத்துக்கு பொட்டுமணி தங்கம் கொடுத்து அதை உருக்கி தாலி செய்யும் பழக்கம் இருந்தது. எந்த சாதிக்கு எப்படி தாலி செய்யணும்னு அந்த நகைத்தொழிலாளிக்கு தான் தெரியும். இன்னிக்கு இந்த நிலைமை எல்லாம் மாறி எல்லா சாதிக்கும் தாலி ரெடிமேடா கிடைக்குது கார்ப்பரேட் நகைக்கடைகளில். விளைவு தங்கம் உருக்குதல் என்ற வைபவமும் காணாம போச்சி நகைதொழிலாளியோட தேவையும் இல்லாம போச்சி. இந்த சுப தினத்தில் தாலிக்கு தங்கம் உருக்க உத்தமம்னு நாள் குறிக்கிற ஜோசியர்கள் கூட இப்போது, இந்த சுப தினத்தில் தாலிக்கு தங்கம் வாங்க உத்தமம்னு எழுதி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
 
நகைதொழிலை பாரம்பரியமாக செய்து வரும் குடும்பங்களில் உள்ள பையன்களுக்கு பள்ளிப்படிப்பு சரியாக வராவிட்டால் அவன் அடுத்த நாள் செல்வது நகைப்பட்டறையாகவே இருக்கும். இப்படியே சிறுவயது முதல் தொழில்கூடத்திலேயே வாழ்க்கையை ஒட்டி வந்த இவர்களுக்கு வேறு தொழில்கள் குறித்த அறிவோ அதற்கு தகுந்த யோசனைகளோ கிடைப்பது இல்லை. தொடர்ந்து பார்த்து வந்த தொழிலில் திடீரென முட்டுக்கட்டை ஏற்படும்போது அதை போட்டி போட்டு சமாளிக்க இவர்களுக்கு வழி தெரிவதில்லை. அதற்கு பொருளாதாரம் பெரிய தடையாக இருக்கிறது. இதன் காரணமாகவே தங்களுக்கு கிடைத்த வேலைகளை செய்து வருகின்றனர்.
 
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்று மத்திய அரசு அறிவித்தவுடன் அதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள், வியாபார அமைப்புகள் சில்லறை வணிகர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி போராட்டங்கள் நடத்தினார்கள். கண்முன்னே ஒரு சமூகம் தன் சுயஅங்கீகாரத்தை இழந்து நிற்கிறது. இவர்களுக்கு ஆதரவாக எந்த அரசியல் கட்சிகளும் இல்லை, போராட்டங்கள் நடத்த வணிக அமைப்புகளும் இல்லை.
 
பிறப்பால் உயர் சாதியில் பிறந்திருக்க வேண்டும் அல்லது கீழ் சாதியில் பிறந்திருக்க வேண்டும். இரண்டிலும் இல்லாவிட்டாலும் டிசைடிங் வோட்டர்ஸ் என அழைக்கப்படும் பெரும்பான்மையான மக்கள் இருக்க கூடிய சாதியிலாவது பிறந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் குரல் சென்று சேர வேண்டிய இடத்திற்கு சென்று சேரும். இடைப்பட்ட சாதியில் பிறந்த அனைவருக்கும் திரிசங்கு நிலைதான்.
 

Leave a comment